மகிந்த ராஜபக்ஷ காலத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அப்போதைய பொருளாதார அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ அரசின் முக்கிய உயர் பதவிகளுக்கு தமது கட்சிக்காரர்களை நியமித்ததுபோல், தற்போது மைத்திரிபால சிறிசேன தமது கட்சிக்காரர் ஒருவரை வடக்கு மாகாண போக்குவரத்துச் சபையின் பிராந்திய முகாமையாளராக அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் இப்பதவிக்குத் தகுதியானவர்கள் எத்தனையோ பேர் இருக்கையில் அரசாங்கம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரை நியமித்துள்ளது.
குறித்த அதிகாரி யாழ்ப்பாணத்திலுள்ள போக்குவரத்துச் சபையின் அனுவலகத்துக்குச் செல்லாது, தனிப்பட்ட ரீதியில் தான் ஒரு அலுவலகத்தை அமைத்து செயற்படுகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் ஒரு அரசாங்க அதிகாரி எவ்வாறு எட்சியின் அமைப்பாளராக நியமிக்கமுடியும் எனவும் கேள்வி எழுப்பிய அவர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்றவாறே மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்திலும் நடைபெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், அரசாங்க அதிகாரி ஒருவருக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்படுமிடத்து, அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சில அரசியல் வேலைகளை மேற்கொள்ளமுடியும் எனவும், அரசாங்கத்தின் இச்செயற்பாடு நீதிக்குப் புறம்பானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.