சேலம் ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளை வழக்கு

321 0

201608240921220757_train-robbery-case-railway-police-investigation-manager_SECVPFசேலம் ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரெயில்வே மேலாளர் உள்பட 34 பேரிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.சேலம் , ராசிபுரம், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பணம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு சேலம் எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது இந்த ரெயிலின் மேற்கூரையை கொள்ளையர் உடைத்து உள்ளே இறங்கி ரூ.6 கோடி பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தில் துப்புதுலங்க சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஐ.ஜி.மகேஸ்குமார் அகர்வால், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரெண்டுகள் நாகஜோதி, ராஜேஸ்வரி, சிறப்பு புலனாய்வு அதிகாரி அமித்குமார்சிங் ஆகியோர் தனித்தனியே விசாரித்து வருகிறார்கள்.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், போலீசாரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தனிப்படை போலீசார் சேலம் முதல் விருத்தாசலம் வரை உள்ள ரெயில்பாதைகளில் நடந்து சென்று விசாரித்து வருகிறார்கள்.

ரெயில்பாதையில் ஏதும் தடயம் சிக்குகிறதா என்றும் போலீசார் பார்த்தும் வருகிறார்கள்.

ரூ.6 கோடி கொள்ளை வழக்கில் தற்போது விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. சேலத்தில் தங்கி விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு போலீஸ் சூப்பிரெண்டு அமித்குமார்சிங், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரெண்டு நாகஜோதி தலைமையிலான போலீசார் தற்போது சேலம் ஜங்சன் ரெயில் நிலைய மேலாளர், கேங்மேன்கள், போர்ட்டர்கள் என 34 பேரிடம் விசாரணை தொடங்கி உள்ளனர்.

இவர்கள் அனைவரும் தனித்தனியே அழைத்து விசாரணை நடந்து வருகிறது. ரெயில்வே ஊழியர்கள் மூலம் ரெயில்பெட்டியில் பணம் கொண்டு செல்லும் விவரம் யாருக்கும் தெரிவிக்கப்பட்டு இருக்கலாம். இவர் யார் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ரெயில் கொள்ளை நடந்த போது சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் யார் யார் பணியில் இருந்தனர் என்றும், யார் யார் விடுமுறையில் சென்று இருந்தனர் என்றும் விசாரணை நடக்கிறது.

ரெயில் கொள்ளையில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் ஈடுபட்டனரா? என்றும் விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உதவியாக இருக்க சேலம் மாநகரம் மற்றும் சேலம், தர்மபுரி, திருப்பூர் மாவட்டங்களில் பணியாற்றும் ஏட்டுக்கள் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

சேலம் அம்மாப்பேட்டை ஏட்டுக்கள் செந்தில்குமார், சாமிக்கண்ணு, வீராணம் ஏட்டுக்கள் உதயக்குமார், பாலசுப்பிரமணியன், பேர்லேண்ட்ஸ் ஏட்டு தண்டபாணி, சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஏட்டு ரமேஷ், தர்மபுரி பலனேசன், சண்முகராஜன், திருப்பூர் ஏட்டுக்கள் பச்சையப்பன், லிங்கேஸ்வரன் ஆகியோர் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.