பழனி அரசு அருங்காட்சியகத்தில் கி.மு. 600 முதல் இன்றைய நாணயங்கள் வரை என்ற தலைப்பில் நாணய கண்காட்சி நடந்தது. இதில் இந்தியாவின் தொன்மையை பிரதிபலிக்கும் வகையில் 1000-க்கும் மேற்பட்ட கி.மு.600 காலகட்டத்தில் உள்ள நாணயங்கள் காட்சிபடுத்தப்பட்டன. அவற்றை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.இதுகுறித்து நாணய சேகரிப்பாளர் சிவகாசி ராஜராஜன் கூறுகையில் நாங்கள் 4 தலைமுறையாக நாணய சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளோம். 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நாணயங்கள் உள்ளன. இதில் மவுரியர் ஆட்சியில் அசோகரின் தாத்தா காலத்தில் பயன்படுத்திய முத்திரை நாணயம் இந்தியாவின் முதல் நாணயம் என்கின்றனர்.
கி.பி. 1526-ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் பாபர், ஷெர்ஷா, ஆலம்கீர், ஜஹாங்கீர் மனைவி நூர்ஜஹான் வெளியிட்ட பெர்சிய எழுத்துக்கள் கொண்ட நாணயங்களும் சேகரித்து வைத்து உள்ளேன்.
இவை தவிர இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய யூதர்களின் நாணயம் உள்பட 20 ஆயிரம் நாணயங்கள் சேகரித்து உள்ளேன். வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ள கண்காட்சியில் வைக்கிறேன் என்றார்.