மாலைதீவு அரசினால் 15 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கைஅரசிடம் கையளிக்கப்பட்ட மூன்று அரசியல் கைதிகளின் தண்டனைக் காலம் நிறைவுற்றதனால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் அமைச்சிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் நாட்டிற்கு திரும்பியவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதி நீதியமைச்சர் பதிலளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ. சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
மாலைதீவு அரசினால் 15 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை அரசிடம் வழங்கிய மூன்று அரசியல் கைதிகளின் தண்டனைக் காலம் நிறைவுற்றதனால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடந்த யூன் மாதம் குறித்த அமைச்சிற்கு விண்ணப்பித்திருந்தேன். அதாவது 2007-05-18 அன்று மாலைதீவுக் கடற் பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் முல்லைத்தீவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மாலைதீவு அரசினால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவர் தொடர்பிலும் அந்த நாட்டுப் பொலிசார் மாலைதீவு நீதிமன்றில் வழக்குத் தொடுத்தனர். அதன் பெயரில் குறித்த மூவரையும் குற்றவாளிகள் எனவும் அதற்காக 15 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்குவதாகவும் அந்த நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் குறித்த கைதிகள் தண்டனையை இலங்கை சிறையில் அனுபவிக்கலாம் என்பதன் பெயரில் இலங்கை அரசிடம் உத்தியோக பூர்வமாக கையளித்திருந்தனர்.
இவ்வாறு கையளிக்கப்பட்ட கைதிகள் மூவரும் இன்றுவரை இலங்கையின் சிறைகளிலேயே தண்டனையை அனுபவித்தும் வருகின்றனர். இருப்பினும் மாலைதீவு அரசினதும் இலங்கை அரசினது கணக்கின்படி ஓர் ஆண்டு சிறைத்தண்டனை என்பது தொடர்ச்சியாக அனுபவிப்பதாயின் 8 மாதங்களும் 10 நாட்களும் மட்டுமே ஆகும். எஞ்சிய நாட்கள் விடுமுறைக் கழிவாகவே கருதப்படுகின்றது. இது இலங்கையிலும் கடைப்பிடிக்கப்படும் அதே நேரம் மாலைதீவிலும் இதே நடைமுறையே உள்ளது.
இந்த நிலையில் 2007ம் ஆண்டில் இருந்து இன்று வரையில் தொடர்ச்சியாக சிறையில் வாடும் குறித்த மூன்று இளைஞர்களினதும் 15 ஆண்டுகளிற்கான காலம் கடந்த மே மாதமே நிறைவு பெற்றுள்ளதனால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குறித்த கைதிகளின் பெற்றோர் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். அக் கோரிக்கையினை நான் எழுத்து மூலமாக கடந்த யூலை மாதம் 2ம் திகதி சிறைச்சாலைகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
குறித்த கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோருடன் கலந்துபேசி விரைவில் பதிலளிப்பதாக அமைச்சர் அன்று தெரிவித்திருந்தார். ஆனால் மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்றுவரை குறித்த மூவரும் விடுதலை செய்யப்படவும் இல்லை. இது தொடர்பான எனது கோரிக்கைக்கு அமைச்சரிடம் இருந்து பதிலும் கிடைக்கவில்லை என்பதனை நேற்று மீண்டும் சுட்டிக்காட்டியபோதே பிரதி நீதியமசைச்சர் இவ்வாறு நேரடியாக பதிலளித்துள்ளார். எனத் தெரிவித்தார்.