சனநாயகத்தின் ஒரு அங்கமாக சுயாதீன அதிகாரிகள் நியமனமும், சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமனமும், செயற்பாடுடையதாக விளங்குகின்றன.
அரசமைப்பில் சில முக்கிய அதிகாரிகளை அரச தலைவர் நியமிப்பது தொடர்பாகவும், சம்பளம் மற்றும் குறித்த பதவிகளுக்குத் தேவையான அடிப்படை அம்சங்கள் குறித்தும் உறுப்புரையில் காணலாம்.
குறிப்பாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம், கணக்காய்வாளர் தலைமையதிபதி, சட்டமா அதிபர், தேர்தல் ஆணையாளர், தலைமை நீதிபதி போன்ற சுயாதீனமாக இயங்கும் உயர் அதிகாரிகளின் நியமனங் கள் அரசமைப்பில் விதைந்துரைக் கப்பட்டவாறு அரச தலைவரால் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசமைப்புக்கான 19ஆவது
திருத்தத்தின் படியான
அதிகாரக் கட்டுப்பாடு
ஆனால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்புக்கான 19ஆவது திருத்தத்தின்படி ஏற்கனவே உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சபையின் பரிந்துரையைப் பெற்றே அரச தலைவர் குறித்த நியமனங்களை மேற்கொள்ள வேண்டுமென திருத்தப் பட்டுள்ளது.
சில அதிகாரிகளின் நியமனங்கள் தவிர, ஏனையவை சில அதிகாரிகளின் தலைமையில் ஒரு குழுவும், அந்த குழு உறுப்பினர்களைச் சபாநாயகர், தலைமை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதியொருவர் எனச் சேர்ந்து சுயாதீன ஆணைக்குழுவாக நியமிப்பார்கள்.
சட்டமா அதிபராக அந்தத் திணைக்களத்தின் மூத்த சட்டவாதியாக உள்ளவரையே அரச தலைவர் நியமிப்பது வழக்கமானதொன்று.
சட்டமா அதிபரின் தொழிற்பாடு அரச தலைவருக்கும் தலைமை அமைச்சருக்கும் சட்ட ஆலோசனை வழங்குவதாகும்.
அத்தோடு குற்றவியல் வழக்குகளை மேல் நீதிமன்றில் தொடுப்பதற்குத் தேவையான குற்றப்பத் திரிகை வழக்குப் பிராது ஆகியவற்றை தயாரித்தலும் மேல் நீதிமன்றில் வழக்குகளை நடத்துவதுமாகும்.
சுயாதீன ஆணைக்குழுக்கள்
அரசியல் தலையீடுகளின்றி
செயற்பட வாய்ப்பு
சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதும், அவை அரசியல் தலையீடுகளின்றி சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றமையும் ஒரு சிறந்த சனநாயகத்தை செயலுருவாக்கும் விடயமாகும்.
தேர்தல் ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, பல்கலக்கழக வழங்கல் ஆணைக்குழு, கணக்காய்வாளர் சேவை ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, பகிரங்க சேவை ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்ற ஆணைக்குழுக்கள் சனநாயக அடிப்படையில் எவரது தலையீடுகளுமின்றிச் சுயாதீன மாக இயங்கும் நோக்கம் கொண்டவை.
இவ்வாறு சுயாதீனமாகச் செயற்படுவதற்கான அதிகாரத்தை வழங்்கியும் வேறு தரப்புகளது தலையிடாத் தன்மை உறுதிப்படுத்திய போதிலும், அரசமைப்புக்கு அமைய அதிகாரிகள் அல்லது ஆணைக்குழுக்கள் நாட்டின் பிரசைகளின் தேவைகளை அல்லது பிரச்சினைகளை ஊன்றி அலசி ஆராய்ந்து முடிவு எடுக்காது, நேர்மையற்ற, சனநாயக ரீதியற்ற விதத்தில் தீர்மானங் கள் மேற்கொள்ளும்போது அவற்றை எவ்வாறு நேர் சீர் செய்வது என்பதில் தெளிவற்ற தன்மையே காணப்படுகின்றது.
வேலியே பயிரை மேய்வதற்கொப்ப, சனநாயகத்தைக் கட்டிக் காக்க வேண்டிய ஒருவர், சனநாயகத்துக்கு முரண்பட்ட வகையில் செயற்பட்டால் எவ்வாறு நாடு முன்னேறும் என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
அரச தலைவர் கூடத் தலையிட முடியாதபோது அரசமைப்பினால் நியமிக்கப்பட்ட அந்த அதிகாரியின் குறித்த முடிவை மாற்ற வைப்பதற்கு என்ன வழி என்பதில் சட்டம் மௌனிக்கின்றது.
வழக்கின் சாட்சிகள்
நீதிமன்றில் முன்னிலையாவது
குறித்து விதண்டாவாதக்
கருத்து
தமிழ்பேசும் எதிரிகளுக்கு எதிரான வழக்கு, தமிழ்ச் சட்டத்தரணிகள் வாதாடும் வழக்கு, தமிழில் விசாரிக்கப்படக்கூடிய சூழ்நிலையில்,
சாட்சிகள் வவுனியா நீதிமன்றில் முன்னிலையாவதற்கு அச்சப்படுகின்றனர் என்ற ஒரு விதண்டா வாதக் கருத்தை மட்டும் கூறி நீதிமன்ற விசாரணையை சிங்களப் பகுதி நீதிமன்றுக்கு மாற்றுவது நீதிக்குப் புறம்பான செயல் என்பது வெளிப்படை.
எதிரிகளின் சட்டத்தரணிகள் சிங்கள மொழியில் பரிச்சயமற்றவர்களாக இருப்பதினால் சிங்கள மொழி சட்டத்தரணிகளை நாடி அவர்களை முன்னிலையாக வைப்பதற்கும்,
அவர்களுக்கு வழக்குக் குறித்த தெளிவைப் பெற்றுக் கொள்ள வைக்கவும் காலம் எடுக்கும் என்பதையும் தாண்டி அனுராதபுரத்தில் எதிரிகளின் குடும்பத்தினர் மற்றும் தமிழ் பேசும் சட்டத்தரணிகள் தங்கியிருந்து வழக்கை நடத்துவது பெரும் பிரச்சினையான தொன்று.
அதை விட அரசு சாட்சிகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கி வவுனியா நீதிமன்றில் வழக்கை விசாரிக்க வைப்பதில் என்ன தடைகள் இருக்கின்றன என்பதில் விளக்கமில்லை.
இவற்றில் எதை சனநாயக செயற்பாடாகக் கொள்வது?
இத்தனை வருடங்களாக, குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் விசாரிக்கப்பட்டபோது நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த சாட்சிகளுக்கு, குறித்த வழக்கை மூன்று நாள்களுக்கு தொடர்ச்சியாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ள இந்தத் தருணத்தில்,
இவ்வாறாக விசாரணைக்காக நீதிமன்றத்தை மாற்றுவதன் மூலம் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் உருவாவதை விரும்பாத சில சக்திகள் செயற்படுகின்றன என்ற உண்மை புலனாகிறது.
உள்நாட்டு சிங்கள நீதிபதிகளின் விசாரணையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையற்ற நிலைமை வலுப்பெறுகின்றது.