போர்க்காலப்பகுதியில் பொதுமக்களால் கைவிடப்பட்டு முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஆறுமுகம் வித்தியாலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று நாள்களுள் அந்த வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்படும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
போர்க் காலத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஆறுமுகம் வித்தியாலய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.
போர் முடிவடைந்து 8 ஆண்டுகளாகியும் அவை மீட்கப்படாத நிலையில் தற்போது உருக்குலைந்து காணப்படுகின்றன.
அவற்றைச் சூழ புதர்கள் வளர்ந்தன. இந்தப் புதர்கள் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தின.
மாணவர்கள் நாளாந்தம் பயத்துடனேயே தமது கற்றல், விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர்.
அந்த வாகனங்களைப் பாதுகாக்கப் பாடசாலை வளாகத்தில் இராணுவத்தினர் காவலுக்கு வைக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாகப் பாடசாலை நிர்வாகம், மாவட்டச் செயலாளருக்கும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுக்கும் தெரியப்படுத்தியிருந்தது.
2015ஆம் ஆண்டு மாவட்டச் செயலாளரால் முல்லைத்தீவுப் பாதுகாப்புப்படைத் தலைமையகத்துக்கு குறித்த விடயம் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டது.
ரவிகரன் கடந்த 2016ஆம் ஆண்டு இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருக்குத் தெரியப்படுத்தினார்.
முதலமைச்சராலும் முல்லைத்தீவு பாதுகாப்புப்படைத் தலைமையகத்துக்குக் கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டது.
இந்த அறிவித்தல்களால் தீர்வுகள் ஏதும் கிடைக்காத நிலையில், ரவிகரன் மீண்டும் முதல மைச்சருக்கு கடந்த செப்ரெம்பர் மாதம் கடிதம் அனுப்பினார்.
இதன் படி நேற்று முன்தினம் முதல் குறித்த பாடசாலை வளாகத்தில் உள்ள வாகனங்கள் படையினராலும் பொலிஸாராலும் அங்கிருந்து அகற்றப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விடயத்தை ரவிகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.