கெகிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட மடாடுகம பிரதேச அரச பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு பாடசாலை நிர்வாகமும் அதிபரும் வழங்கிய தண்டனையில் குறித்த மாணவி தம்புள்ள ஆரம்ப வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரு வேளை உணவுக்கு கூட சிரமப்படும் குடும்ப சூழ்நிலையில் குறித்த மாணவி காலை உணவில்லாது பாடசாலைக்கு சென்ற போது வாந்தி எடுத்து மயக்கமுற்றுள்ளார்.
இந் நிலையில் குறித்த மாணவியின் பாடசாலை அதிபர் எது வித விசாரணைகளுமின்றி பெற்றோரை வரவழைத்து மாணவி கர்ப்பமாக இருக்கிறார் என கதையை உருவாக்கி பாடசாலை நிர்வாகத்திடம் கூறி பாடசாலையை விட்டு நீக்கிவிட்டுள்ளார்.
கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அந்த ஏழை பெற்றோர் அயலவரிடம் 500 ரூபாவாய் கடனாக பெற்றுக் கொண்டு தங்கள் மகளை தம்புள்ள ஆரம்ப வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று வைத்தியர்களிடம் அதிபர் ஆசிரியர்கள் கூறியதை அவ்வாறே கூறியுள்ளனர்.
வைத்தியர்களும் குறித்த மாணவியை பல வித சோதனைகளுக்குட்படுத்தியதன் பின்னர் சிறுமி கர்ப்பமாக இல்லை என்றும் அவர் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தம்புள்ள வைத்தியசாலை வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில்
“ குறித்த சிறுமியை சில நாட்கள் வைத்திய சாலையில் அனுமதித்து பல பரிசோதனைகளை மேற்கொண்டதில் சிறுமி கர்ப்பமாகவோ துஷ்பிரயோகப்படுத்தப்பட்டோ இல்லை என நிரூபனமாகியுள்ளது.
இது தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவிற்கு முறைப்பாட செய்துள்ளோம்.
மேலும் குறித்த சிறுமி பாடசாலை நிர்வாகத்தினரதும் அதிபரினதும் போலி குற்றச்சாட்டின் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் ஆகையால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலையில் வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.