வடக்கு மாகாணத்தில் 500 மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள் உள்ள நிலையில் கல்வியியற் கல்லூரிகளில், பயிற்சிபெற்று நடப்பாண்டில் ஆசிரிய நியமனம் கிடைக்கும் ஆசிரியர்களில் அரைவாசிப்பேரையே வடக்கு மாகாணத்துக்கு நியமிக்க கொழும்பு கல்வி அமைச்சு எடுத்திருக்கும் முடிவு
வடக்கு மாகாணத்தின் கல்வியை இன்னும் பாதாளத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சி என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.
இந்த விடயம் தொடர்பில் சங்கம் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது; கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சிபெற்று நடப்பாண்டில் ஆசிரிய நியமனம் கிடைக்கும் வடமாகாணத்தைச் சேர்ந்த 400க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் 207பேர் மட்டுமே வடக்கு மாகாணத்துக்கு நியமனம் செய்யப்படவுள்ளனர்.
அவர்களை ஆசிரிய பயிற்சிக்காக இணைக்கும் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பிரதேசசெயலக பிரிவு களில் உள்ள ஆசிரிய வெற்றிடங்களையும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் வெற்றிடங்களையும் கணக்கில் கொண்டே விண்ணப்பங்கள் கோரப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி வடக்கு மாகாணத்தில் 500மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளன.ஆனால் பயிற்சி முடித்த ஆசிரியர்களில் அரை வாசிப்பேருக்கே வடக்கு மாகாணத்துக்கு நியமனம் வழங்கியுள்ள கொழும்பு அரசு தவறிழைத்தது மட்டுமன்றி வடக்கு மாகாணத்தின் கல்வியை இன்னும் பாதாளத்துக்குக் கொண்டுசெல்ல முயலுகின்றது.
இதில் யாவரும் அறிந்துகொள்ள வேண்டிய விடயம். பட்டதாரிகள் தவிர்ந்த எந்த ஆசிரியர் நியமனம் வழங்கும் அதிகாரமும் மாகாண சபைக்குக் கிடையாது. ஆகையினால் தான் வடக்கு மாகாணத்தில் நீண்ட காலம் தொண்டராசிரியர்களாகக் கடமையாற்றியோருக்கு கொழும்புக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் நேர்முகத் தேர்வை நடத்தினர்.
அதன் அடிப்படையிலும் பலர் நிராகரிக்கப்பட்டு 200க்கும் உட்பட்டவர்களுக்கே நியமனம் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் தற்போது வடக்கு மாகாண சபையால் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு என்னதான் தீர்வு? ஒட்டுமொத்தமாக வடக்கு மாகாண ஆசிரிய வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரம் வடக்கு கல்வி அமைச்சிடம் வழங்கப்படவேண்டும்.
அல்லது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களை மதித்து தேவையானவற்றை வழங்க வேண்டும்.
இதைவிட கொழும்பு அரசு கல்வித் துறைக்குப் போதிய நிதியை ஒதுக்கியுள்ளதாக அரச தலைவர் கூறுகின்றார்.எனினும் புதிதாக நியமனம் வழங்கிய ஆசிரியர்களுக்கு மாதாந்த வேதனம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை யாவரும் அறிவர்.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக வடக்கு மாகாண சபையின் துறைசார்ந்த உறுப்பினர்களோடு, வடக்கு மாகாண உயர் அதிகாரிகளும் சேர்ந்து சென்று அரச தலைவரைச் சந்தித்து, எடுத்துரைத்து அத்தகவலை ஊட கங்களுக்கு வழங்க வேண்டும்– என்றுள்ளது.