மகாநாயக்க தேரர்களையும்- பௌத்த பீடங்களையும் ஒரு குழு தவறாக வழிநடத்துகின்றது, புதிய அரசமைப்புத் தொடர்பில் அவர்களுக்குத் தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன என்று நேற்றுத் தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன.
நாங்கள் அதிகாரப் பகிர்வு என்ற கோட்பாட்டுக்கு அமைய பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வைக் காண்பதில் உறுதியாக உள்ளோம். நாங்கள் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை ஏற்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய தீபாவளி தின நிகழ்வு அரச தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அரச தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புதிய அரசமைப்புத் தேவையில்லை. இந்த முயற்சிகளை உடனடியாக நிறுத்தவும். தற்போது இருக்கின்ற அரசமைப்பிலும் திருத்தங்களும் தேவையில்லை.
1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட – தற்போது நடைமுறையில் இருக்கின்ற அரசமைப்பே அப்படியே தொடரட்டும் என்று மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் இணைந்த காரக மகா சங்க சபா உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தமது முடிவை நேற்று முன்தினம் கூடி ஆராய்ந்த பின்னர் வெளியிட்டிருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையிலேயே அரச தலைவர் மைத்திரிபால நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கில் ஒரு பகுதி மக்கள் தென்பகுதி மக்களைத் துவேசத்துடன் பார்க்கின்றனர். தெற்கில் உள்ள ஒரு பகுதி மக்களும் வடக்கு மக்களை துவேசத்துடன் பார்க்கின்றனர். இந்த முரண்பாடு களையப்படவேண்டும்.
இன்று (நேற்று) வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் முன்வைத்த கோரிக்கை முக்கியத்துவமானது. பேசுவதன் ஊடாகத் தீர்க்கலாம் என்று கூறினேன்.
தற்போது வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை புதிய அரசமைப்பைத் தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட ஆவணம். அதனைப் பிரச்சினைக்குரியதாக்குவதில் அர்த்தமில்லை.
நான் வெளிநாட்டுக்குப் பணிந்து அரசமைப்பைத் தயாரிப்பதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். செல்வா பண்டா- ஒப்பந்தம், செல்வா-டட்லி ஒப்பந்தங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவை எல்லாம் வெளிநாட்டு அழுத்தத்துக்கு அடிபணிந்தா மேற்கொள்ளப்பட்டது என்பதை இங்கே கேட்க விரும்புகின்றேன்.என்றார்.