மாலபே சைட்டம் மருத்துவக் கல்லூரியை நாம் மூட மாட்டோம். சைட்டம் பிரச்சினைக்கான தீர்வை ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பார். இவ்வாறு சபை முதல்வரும் உயர்கல்வி அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘‘சைட்டம் தொடர்பில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்று தினேஸ் குணவர்த்தன கேள்வி முன்வைத்தார்.
‘‘சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பில் மாணவர்களுடன் பேச்சு நடத்தினால் அதனை மூடுமாறே கேட்கின்றனர். சைட்டம் பிரச்சினை தொடர்பாக இணக்க நிலைக்கு அரசு வந்துள்ளது. சைட்டம் கல்லுரிக்குப் போதுமான தரம் இல்லை என்று கூறினர். அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளோம். நெவில் பெர்னான்டோ வைத்தியசாலை தரமில்லை என்று கூறினர். அதனை நாம் அரசுடமையாக்கியுள்ளோம். அரசு இணக்க நிலமைக்கு வந்துள்ளது. மாணவர்களோ, வைத்தியர்களோ சைட்டம் கல்லூரியை மூடவேண்டும் என்பதிலேயே உறுதியாக உள்ளனர். இவ்வாறு செயற்பட்டு தீர்வினைக் காண முடியாது. பல்கலைக் கழக பீடாதிபதிகள் இணங்கிச் சென்றாலும் அவர்களையும் பின்னர் திசை திருப்புகின்றனர். இதற்கு முடிவுகட்டவேண்டும்’’ என்று பதிலளித்தார் அமைச்சர்.
மகிந்த அணியினர் கோசமிடுகின்றனர். எனினும் சைட்டம் பிரச்சினைக்கு வித்திட்டவர்கள் முன்னைய ஆட்சியாளர்களேயாவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘‘மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போது சைட்டம் கல்லூரியை அமைக்க 600 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டது. உயர்கல்வி அமைச்சருக்குப் பதிலாகச் சைட்டம் தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது தினேஸ் குணவர்தனவாவார்.இதற்காக அவர் மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும். மாலபே சைட்டம் மருத்துவக் கல்லூரியை நாம் மூட மாட்டோம். சைட்டம் பிரச்சினைக்கான தீர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திங்கட்கிழமை அறிவிப்பார்’’ என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.