வடகொரியா பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ரஷிய அதிபர் விலாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. அதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா.சபை மூலம் வடகொரியாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ளன.
மேலும், வடகொரியாவை அச்சுறுத்தும் வகையில் கொரிய தீபகற்ப கடற்பகுதியில் தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு வடகொரியாவின் ஐ.நா.சபைக்கான துணை தூதர் கிம் இன்ரியாங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய அவர், “எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம்”, என கூறியிருந்தார். இது அப்பகுதியில் நிலவிவந்த நிலையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
இந்நிலையில், வடகொரியா பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “வடகொரியாவின் அணுஆயுத சோதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ஆனால் இந்த பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். அப்படி இல்லாமல் வடகொரியாவை ஓரங்கட்டியோ, அந்நாட்டின் மீது அதிக அழுத்தம் கொடுத்தோ அதை தீர்க்க முடியாது”, என அவர் கூறியுள்ளார்.