அரசியல் கைதிகளின் வேண்டுகோளுக்கு இரண்டொரு தினங்களில் சாதகமான பதில் தருவதாக உறுதி-சிவாஜி

10907 0
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வேண்டுகோளுக்கு இரண்டொரு தினங்களில் சாதகமான பதில்களை தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையில் அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கருணாகரன் உள்ளிட்ட 9 பேர் (19.10) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
சுமார் 1 மணித்தியாலயம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன. நீதி மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க துணை சட்டமா அதிபர்கள், உட்பட பொலிஸ அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதுவரையில் 117 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்.  25 அரசியல் கைதிகள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக இருக்கின்றார்கள். இவர்கள்  பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட முடியும். ஐக்கிய நாடுகள் சபையில்  பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள், பயங்கரவாதச் சட்டத்தினை நீக்கினால் பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலையாவார்கள்.
முன்னாள் போராளிகள் 12ஆயிரம் பேரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலை செய்துள்ளார். ஆனால், அரசியல் கைதிகள் 117 பேரை விடுவதற்கு நீங்கள் யோசிக்கின்றார்கள். உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வழக்குகள் வவுனியா நீதிமன்றில்  58 தடவைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் 67 சாட்சிகளில், 64 பேர் இராணுவம், ஏனையவர் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். விமானத்தின் மூலம் சாட்சிகளை அழைத்து வந்து சாட்சியமளிக்க முடியும். அதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகள் வருகின்றார்கள். நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபடுகின்றார்கள். முன்னாள் அமைச்சர்கள் உட்பட தற்போதுள்ள அமைச்சர்கள் வருகின்றார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கின்ற போது, ஏன் சாட்சியங்களுக்கு பாதுகாப்பில்லை என நினைக்கின்றீர்கள், சாட்சிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்க முடியவில்லை என்றால், ஏன் இந்த அரசு என்ற கேள்வி எழுந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினேன்.
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நிலமைகள் மோசமாக இருப்பதனால், உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்;றும் வலியுறுத்தியுள்ளனர்.
சுட்டமா அதிபர்கள் நாட்டில் இல்லாத காரணத்தினால், எதிர்வரும்  திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சாதகமான பதில்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இருந்தும், உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மூவரின் எடை 8 கிலோ கிராம் குறைவடைந்துள்ளமையினால், என்ன நடக்குமென சொல்ல முடியாது. எனவே, அவர்களின் உடல் நிலையை கருத்திற்கொண்டு, தற்காலிகமான முடிவுகளை தற்போது எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. துற்காலிகமான முடிவினை எடுக்குமாறு, அரசியல் கைதிகளின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சட்டமா அதிபர்களுடன் கலந்துரையாடி நிரந்தர முடிவுகளை எடுப்பதாகவும், தற்காலிகமான உண்ணாவிரதத்தினை கைவிடுவதற்கு வலியுறுத்தும் வகையில், இரண்டொரு தினங்களில், சாதகமான பதில்களை தருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a comment