மதுரையில் முதலாம் உலகத் தமிழர் உரையாடல் சங்கம் 04 நிகழ்வு கடந்த பத்தொன்பதாம் திகதி மாலை நான்கு மணியளவில் மதுரை பில்லர் மையத்தில் நடை பெற்றது. சங்கம் 04 அமைப்பின் தலைவர் அருட்திரு.ஜெகத்கஸ்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் தமிழர் வரலாற்றின் பெரும் துயரமாய் ஈழத்தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் 2009ம் ஆண்டு மௌனிக்கப்பட்டு அப்போரின் பேர் அவலங்களைச் சுமந்தவர்களாக ஒரு தேசத்தின் விடுதலைக்காக எமது தேசத்தின் வாழ்வுக்காக இரத்தமும் சதையுமாகி வாழ்வோடு வாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்து அளப்பரிய தியாகங்களை எல்லாம் ஆக்கி ஓய்ந்து போனாலும் எங்கள் வாழ்வு நிமிரும் என்கிற நம்பிக்கையோடு நிமிர்ந்திருக்கின்ற இனத்தின் சாட்சியங்களாக ஈழ மண்ணிலிருந்து நாங்கள் வந்திருக்கிறோம்.
எமக்கே உரித்தான ஈழதேசத்தில் காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களாகவே இருக்கிறார்கள். சிறையில் உள்ளவர்கள் இன்றுவரை நல்லிணக்கம் பேசுகின்ற அரசுகளால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படவில்லை. வடக்கிலும் கிழக்கிலும் தேசவிடுதலைக்காய் போராடிப் போனவர்கள் போனவர்கள் தான். ஆனால் அவர்களது மாற்று வாழ்வுக்கான எந்தவொரு முன்னாயத்தங்களும் தொழிற்சாலை மயப்படுத்தப்பட்ட சூழல் கூட இன்றும் உருவாக்கப்படவில்லை என்கின்ற செய்திகளோடு தான் உங்கள் முன் வந்திருக்கிறோம்.
எங்கள் மண்ணிலே எண்பதாயிரத்துக்கு மேற்பட்ட பதிவு செய்த விதவைகள் ஒருபுறம். பதிவு செய்யப்படாமல் இருப்பது எத்தனை பேர். இவர்களது வாழ்க்கை இவர்களது குழந்தைகள் இந்த மண்ணிலே போராடி எம்மண்ணின் வாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்து இன்னும் மண்ணிலே உறங்கிக் கொண்டிருக்கின்ற மாவீரர்களின் குடும்பங்கள் போராளிகளது குடும்பங்கள் இன்னமும் தமது வாழ்வியலுக்காக பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.
உலகத்துக்கே அடையாளத்தைத் தந்த ஒரு சிறிய தீவில் அளவிலே சிறிய இனமாக இருந்தாலும் கூட நாங்கள் தமிழர் என்கிற அந்த உணர்வோடு போராடி மடிந்த ஒரு இனத்தின் எச்சங்கள் சாட்சிகளாக வந்திருக்கிறோம்.
தன்னுடைய தலை வெட்டப்பட்ட பின்னரும் தண்ணீர் தருகிறது இளநீர் என்பது போல எங்கள் தலைகள் வெட்டப்பட்டாலும் கால்கள் முடமாக்கப்பட்டாலும் எங்களாலும் இந்த உலகத்தில் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கைகளோடு நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.
தற்போது இலங்கை அரசு தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை தமிழர் வரலாற்றில் நிலையான சமாதானம் உருவாகப் போவதில்லை எனவும் தெரிவித்ததோடு போரின் வடுக்களைச் சுமந்து வாழும் தமிழ்க் கைம்பெண்களின் மறுவாழ்வுக்கு தாய்த் தமிழகம் எடுத்து வரும் முயற்சிக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் கூறினர்.
இந்நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் நாம் அமைப்பின் தலைவர் பொறியாளர் சதாசிவம் தமிழர் தொழில் வணிக வேளாண் பொது மன்ற ஒருங்கிணைப்பாளர் வீரக்குமார் மற்றும் மதுரை பாத்திமாக் கல்லூரி மாணவிகள் விரிவுரையாளர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.