தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி யாரும் தனித்துச் செயற்படுவார்களேயானால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் செய்யும் துரோகம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கண்ணகி அம்மன் ஆலய வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்றசெய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை.
இன்று தேசிய கட்சிகள் இரண்டும் உள்ளூராட்சித் தேர்தலை குறிவைத்து பிரதேசங்களில் தமது அமைப்பாளர்களை நியமித்து வடகிழக்கில் தமது அரசியலை பலப்படுத்தி வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்து நிற்குமானால் தமிழர்களின் பலம் உடையும்.
உள்ளூராட்சித் தேர்தல் கிழக்கு மாகாணத்தில் ஒரு முக்கிய தேர்தலாக இருப்பதுடன், பலப்பரீட்சையான தேர்தலாகவும் இருக்கின்றது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திரமான முடிவுகளை எடுத்து வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்போடு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலையை இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.
எனவே உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.