அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள வணிக பூங்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் ஹார்போர்டு கவுண்டி என்ற இடத்தில் எம்மோர்டன் என்ற பெயரில் வணிக பூங்கா உள்ளது.
நேற்று காலை இந்த பூங்காவுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வணிக பூங்காவை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவரது பெயர் ரடீ லபீப் பிரின்ஸ். இவர் ஏற்கனவே குற்றவியல் பின்னணி கொண்டவர் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.