புதுவையில் வெடிகுண்டு வீசி 3 வாலிபர்கள் கொலை

3250 0

புதுவையில் நள்ளிரவில் வெடிகுண்டு வீசி 3 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டனர். தீபாவளி நாளில் ஒரே இடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவை முத்தரையர்பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் நாய் சேகர் (வயது 24). சண்முகாபுரம் அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ஜெரால்டு (24). முத்தரையர்பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்தவர் சதீஷ் (23). மேட்டுப்பாளையம் சாரணப்பேட்டையை சேர்ந்தவர் புளியங்கொட்டை ரங்கராஜ் (25). இவர்கள் அனைவரும் நண்பர்கள்.

நேற்று தீபாவளியை முன்னிட்டு இரவு இவர்களும் மேலும் 5 நண்பர்களும் மேட்டுப்பாளையம் ராம் நகரில் உள்ள இரும்பு பீரோ செய்யும் கம்பெனிக்குள் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.

இரவு 11.30 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட கும்பல் திடீரென அங்கு வந்து கம்பெனியை சுற்றி வளைத்தது. அவர்கள் மதுகுடித்து கொண்டிருந்தவர்களை நோக்கி வெடிகுண்டுகளை வீசினார்கள். இதில் குண்டு வெடித்து சிதறியது.

மதுகுடித்து கொண்டிருந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். குண்டு வெடித்ததில் ஜெரால்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் அரைகுறை காயத்துடன் எழுந்து ஓடினார்கள். அவர்களை ஓட ஓட விரட்டி அந்த கும்பல் வெட்டியது.

இதில் நாய்சேகர், சதீஷ் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். புளியங்கொட்டை ரங்கராஜிக்கும் வெட்டு விழுந்தது. மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அவர்களை கொலை கும்பல் விரட்டி சென்றது. ஆனால் அவர்கள் தப்பிவிட்டனர். பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதுபற்றி மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட 3 பேருடைய பிணத்தையும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த புளியங்கொட்டை ரங்கராஜை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட நாய்சேகர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. கொலையுண்ட ஜெரால்டு, சதீஷ் மீதும் அடிதடி வழக்குகள் உள்ளன.

ஊசுட்டேரியில் 2015-ம் ஆண்டு சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரை நாய்சேகரும், அவரது கூட்டாளிகளும் கொன்றனர். இதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனாலும் கொலையாளிகள் யார்? கொலைக்கான உண்மையான காரணங்கள் என்ன? என்று இதுவரை தெரியவில்லை. கொலை நடந்த பகுதியில் பல ரவுடி கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீபாவளி நாளில் ஒரே இடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவையில் வெடிகுண்டு வீசி கொலை செய்வது தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment