துரோகக் கும்பலை, சுயநலக் கூட்டத்தை தலைமை கழகத்தில் இருந்து சட்ட ரீதியாகவே வெளியேற்றுவோம் என்று டி.டிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது::-
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 46-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் கழக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தின் நுழைவு வாயிலில் உள்ள கழகக் கொடியினை ஏற்றி வைத்து டாக்டர் எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் காதுகேளாதோர் இல்லம் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, கழகத்தின் 46-வது ஆண்டு தொடக்க நாள் விழா சிறப்பு மலர் வெளியிடப்படும்.
அதனைத் தொடர்ந்து டாக்டர் எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அறுசுவை உணவும், சீருடையும் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகளும், மாவட்டக் கழக செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் சுயநலனுக்காக கரம் கோர்த்துக் கொண்ட துரோகக் கும்பல் இன்று தலைமைக் கழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டு நடத்துகின்ற நிகழ்வுகள், கோடான கோடி தொண்டர்களுக்கு மன வேதனையை அளித்துள்ளது.
எனினும் பகையை, துரோகத்தை பந்தாடும் பாங்கினை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் சின்னம்மாவின் வழிகாட்டுதலோடு வென்று காட்டுவோம். விரைவில் இந்த துரோகக் கும்பலை, சுயநலக் கூட்டத்தை சட்ட ரீதியாகவே தலைமை கழகத்தில் இருந்து வெளியேற்றிக் காட்டுவோம்.
‘துரோகம்’ என்கிற தற்போதைய களங்கத்தைத் துடைத்தெறிந்து விட்டு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கழகத்தின் துவக்க விழாவை “அனைத்திந்திய அண்ணா திராவிட முன் னேற்றக்கழகம்” என்கிற நமது அடையாளத்தோடு, நம் தலைமைக் கழகத்தில் எழுச்சியோடு கொண்டாடுவோம்.
புரட்சித்தலைவர் கண்ட கனவுகளை நிறைவேற்றியவர் புரட்சித்தலைவி அம்மா, “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று புரட்சித் தலைவி அம்மா அன்று சொன்னார்கள். நாம் அனைவரும் இந்த தீர்க்க தரிசன வார்த்தைகளுக்கு வடிவமாய்த் திகழ்ந்திடுவோம், ஒன்றுபட்டு பணியாற்றிடுவோம் என்று இந்நாளில் சூளுரை ஏற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.