புதுவையில் பஸ் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது

8017 0

புதுவை மாநில அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்ததையடுத்து, பஸ் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

டீசல், வாகன உதிரி பாகங்கள் விலை உயர்வு, டிரைவர்கள்- கண்டக்டர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு காரணங்களால் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று புதுவை தனியார் பஸ் உரிமையாளர்கள் அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

புதுவையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் பஸ் உரிமையாளர்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று புதுவையில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை யூனியன் பிரதேசத்துக்குள் இயக்கப்படும் நகர சேவை பஸ்களுக்கு (டவுண் பஸ்கள்) முதல் நிலைக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஒவ்வொரு நிலைக்கும் (3 கி.மீட்டர்) ரூ.2 கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அதுபோல் புதுவை யூனியன் பிரதேசத்துக்குள் இயக்கப்படும் புறநகர் பஸ்களுக்கு முதல் 6 கி.மீட்டர் வரையில் உள்ள தூரத்துக்கு ரூ.8 என கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன் பின் ஒவ்வொரு கி.மீட்டருக்கும் 75 காசு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விரைவு பஸ்களுக்கு முதல் 2 கி.மீட்டர் வரை உள்ள தூரத்துக்கு ரூ.25 எனவும், அதன் பின் ஒவ்வொரு கி.மீட்டருக்கும் 90 காசு எனவும் உயர்த்தப்படுகிறது.

குளிர்சாதன வசதியுள்ள பஸ்களுக்கும் புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, சாதாரண பஸ்சில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட இரு மடங்கு அதிகமாகும்.

நகர பகுதிகளில் இரவு நேர பஸ் சேவைக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நகர பஸ்களில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். அத்துடன் அரசு நிர்ணயிக்கும் ஜி.எஸ்.டி. கட்டணமும் பஸ்களில் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த பஸ் கட்டண உயர்வு இன்று முதல் புதுவையில் அமலுக்கு வந்தது.

Leave a comment