அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது. இச் சந்திப்பு காலை 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்ட தமது வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என கோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக 23 நாட்களை கடந்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது உண்னாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் ஹர்த்தால் இடம்பெற்றிருந்ததுடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றமாறும் அது தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்திப்பதற்கு சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தி தருமாறும் வடமாகாண ஆளுநரிடம் கடந்த திங்கட்கிழமை பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது.
இதனையடுத்து வடமாகாண ஆளுநர் இன்றைய தினம் அதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுகொடுத்திருந்தார். இதனடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
சந்திப்பு தொடர்பாக யாழ்.பல்கலைகழக அனைத்துபீட மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்னமேனன் தெரிவிக்கையில்
இன்றைய ஜனாதிபதியுடனான சந்திப்பில், உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது தொடர்பிலும், வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்துவோம்.
இவ்வாறு நாம் முன்வைக்கும் இக் கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி எமக்கு உடனடியாக பதிலொன்றை தரவேண்டும் என்றும் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.
யாழ்.பல்கலைகழகத்தின் ஒவ்வொரு பீடங்களினதும் மாணவ தலைவர்கள் , பெண் பிரதிநிதிகள் சார்பாக இருவர் , மாணவ ஆலோசகர்கள் மற்றும் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதியொருவரின் சகோதரியான பல்கலைகழக மாணவி கிருஷாந்தி ஆகியோர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.