இலங்கையில் அண்ட்ரொயிட் திறன்பேசிகளில் ரென்சம்வெயர் எனப்படும் கப்பம் பெறும் மென்பொருட்கள் அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர தயார் நிலையில் குழு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதுதொடர்பில் அன்ட்ரொயிட் திறன்பேசி பாவனையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ‘அழ வேண்டுமா’ என்று பொருள்படும் வொன்னக்ரை என்ற கப்பம்பெறும் மென்பொருள் தீம்பொருள் ஒன்றின் ஊடாக 99 நாடுகளில் பல்வேறு கணினிகள் பாதிக்கப்பட்டன.
ஆய்வுகளில் தற்போது இவ்வாறான மென்பொருள் அன்ட்ரொயிட் திறன்பேசிகளிலும் பரவ ஆரம்பித்திருப்பதாகவும், அதன்பாதிப்பு இலங்கையிலும் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மென்பொருள் கைப்பேசிக்கு மின்னஞ்சல் உள்ளிட்ட ஏதேனும் வடிவங்களில் அனுப்பப்படும் போது, அதனை திறப்பதன் ஊடாக குறித்த கைப்பேசியில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அதில் சேமிக்கப்பட்டுள்ள ஏனைய தொடர்பிலக்கங்களின் கைப்பேசிக்கும் பரவும்.
அத்துடன் கைப்பேசியில் உள்ள முக்கியமான ஆவணங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் குறித்த கப்பம் பெறும் மென்பொருளானது, குறிப்பிட்ட அளவு பணத்தொகையை செலுத்தினால் மாத்திரமே ஆவணங்களை விடுவிக்க முடியும் என்று அச்சுறுத்தும்.
பணம் செலுத்தப்பட்டாலும் ஆவணங்கள் விடுவிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.