அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்ற யாழ். இளைஞன் இந்தோனேசியாவில் மரணம்!

448 0

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்ற தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. இந்தோனேஷியா அகதிகள் தடுப்புமுகாமில் வாழ்ந்துவந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 36 வயதான ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ் என்ற இளைஞனே வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து, தமிழகத்திலுள்ள அகதிமுகாமொன்றில் சில காலம் வாழ்ந்து வந்தார். படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை மீண்டும் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிலுள்ள தடுப்பு முகாமொன்றில், கடந்த சில வருடங்களாக தங்கவைக்கப்பட்டிருந்தார்.

ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ் ஒரு உண்மையான அகதி என அகதிகளுக்கான அமைப்பு (UNHCR) அடையாளம் கண்டிருந்தது. ஜோன்சனை மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த நிலையில், வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவின் குடும்பத்தினர் தமிழகத்தில் வாழ்ந்து வருவதால், அவரது உடலை அங்கு அனுப்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தோனேஷியாவிலேயே அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a comment