ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

446 0
சர்ச்சைக்குறிய மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய கூறினார்.

சர்ச்சைக்குறிய மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்து விசாரணை செய்வதற்காக கடந்த ஜனவரி 27ம் திகதி ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி. சித்சிறி தலைமையிலான இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக உயர் நீதிமன்ற நீதிபதி பிரசண்ண சுஜீவ ஜயவர்தன மற்றும் ஓய்வு பெற்ற பிரதிக் கணக்காய்வாளர் நாயகம் கந்தசாமி வேலுப்பிள்ளை ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

03 மாதங்களுக்கு நியமிக்கப்பட்ட குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை இரண்டு தடவைகள் மூன்று மாதங்களால் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 27ம் திகதி ஆணைக்குழுவின் காலம் நிறைவடையவுள்ளது.

இதுதவிர அந்த ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்றைய தினத்துடன் நிறைவு பெற்றதாக ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி கே.டி. சித்சிறி கூறினார்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதற்கு ஆணைக்குழுவிற்கு எஞ்சியிருக்கும் காலம் போதுமானதல்ல என்று ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய கூறினார்.

ஆகவே ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டதாக செயலாளர் கூறினார்.

Leave a comment