தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள், குழுக்கள் அல்லது வேட்பாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் செலவுகள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கு மற்றும் அச்செலவுகள் தொடர்பில் மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஏதுவான முறையில் தற்போது காணப்படுகின்ற தேர்தல் சட்டங்களை திருத்தம் செய்வதற்கும் மற்றும் புதிதாக சட்டங்களை விதிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பில் விதிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை தொடர்பில் ஆரம்ப இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கையில் 1977ம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட தேர்தல்களில் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கான சட்ட ரீதியாக அவகாசங்கள் காணப்பட்ட போதும் தற்போதைய தேர்தல் முறையில் அவ்வாறான விதிமுறைகள் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.