முப்படைகளினதும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக தான் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் தனது பொறுப்புக்கள் அதிகமெனவும், நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையின் கௌரவத்தையும் அபிமானத்தையும் பாதுகாத்து அவர்களை உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த முப்படைகளாக மாற்றுவதற்கு அரசு தன்னை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.
இன்று அரசியல் மேடைகளிலும் ஒருசில ஊடகங்களிலும் பேசப்படும் படைவீரர்களை தண்டித்தல் எனும் கூற்றினைத் தான் வன்மையாக நிராகரிப்பதாகத் தெரிவித்த அவர் குறுகிய அரசியல் நோக்கங்களை விட தாய்நாட்டின் அபிமானத்திற்காக பணியாற்றுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.