படுகொலை நடந்து 20 வருடங்கள் கடந்துள்ளபோதும் அந்தப் படுகொலைக்கு சரியான நீதி வழங்கப்படவில்லையென குமாரபுர படுகொலைசம்பவத்துடன் தொடர்புடைய மக்கள் தெரிவித்துள்ளர். அண்மையில் நடந்த அனுராதபுரம் மேல் நீதிமன்ற வழக்கிலும் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மூதூரில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை செயலணிக்கான கலந்துரையாடல் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட தங்கவேல் மருதாயி, ‘எனது தந்தையையும் கணவரையும் சுட்டவர்களை நான் அடையாளம் காட்டியும் எமக்கு நீதி கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
குமாரபுரம் கிராமத்தில் 26 குடும்பங்கள் படுகொலை செய்யப்பட்டபோது எமது குடும்பமும் மோசமாக பாதிக்கப்பட்டது. இப்பொழுது நாங்கள் எந்தவொரு ஆதரவுமின்றி கொட்டிலில் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.
எனது கணவர் தங்கவேலும், தந்தை கிட்டினன் என்பவரும் இச்சம்பவத்தில் படுகொலையானார்கள்.
இவர்கள் உயிருடன் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது. என் கண்முன்னே நடந்த கொடூரம் தொடர்பாக அண்மையில் நடந்து முடிந்த வழக்கில் விரிவாகக் கூறியதுடன் குற்றவாளிகளையும் இனங்காட்டினேன்.
பயன் ஏதும் கிடைக்கவில்லை. 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டுள்ளோம். எமது இந்த பாதிப்புக்கு ஒரு முடிவான பதில் தரப்பட வேண்டும். சம்பவம் நடந்த உடனும் பின்னர் நடந்த விசாரணைகளிலும் நாம் துணிந்து நடந்த வற்றை விபரித்தும் தீர்வும் இல்லை. எமது வாழ்வும் உயரவில்லை. எனவே எமது உறவுகளின் படுகொலைக்கு ஒரு முடிவு வேண்டும் என்றார்.