தீவிரவாத முறியடிப்பு சட்டமூலம் அடுத்தவருடம் முதற்பகுதியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க இதனை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்கள் சேர்க்கப்பட வேண்டியுள்ளதுடன், அது குறித்த பல்வேறு தரப்பினரின் இணக்கப்பாடும் அவசியப்படுகிறது.
இந்தநிலையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அடுத்தவருடம் முற்பகுதியில் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இன்று முன்வைத்தார்.
இது தொடர்பில் உரையாற்றும் போதே அமைச்சர் சாகல ரத்நாயக்க இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் வியாழக்கிழமை அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் 3 அரசியல் கைதிகள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.
சட்டஒழுங்குகள் அமைச்சர் தலைமையிலான இந்த பேச்சுவார்த்தையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, நீதி அமைச்சு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிளும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.