கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியை சேர்ந்த 11 வயதுச் சிறுவன் இரு இதய அறைகளுடன் மட்டும் உயிர் வாழ்ந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் பரிதாபகரமாக உயிரிழந்தான்.
கிருஸ்னசாமி- கோவரசன் என்னும் முழங்காவில் இராஜபுரத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவனாவான்.
குறித்த சிறுவன் சக சிறுவர்களுடன் இனைந்து அயலில் விளையாடிய பின்பு வீடு திரும்பிய நிலையில். சிறிது நேரத்தின் பின்பு குறித்த சிறுவன் தலைசுற்று எனக் கூறியுள்ளதோடு வாந்தியும் எடுத்துள்ளார். இதனால் பெற்றோர் சிறுவனை முழங்காவில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். அச் சமயம் சிறுவன் மயக்கமடைந்துள்ளான்
இதனை அவதானித்த முழங்காவில் வைத்தியர் உடனடியாகவே நோயாளர் காவு வண்டியில் குறித்த சிறுவனை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.
இருப்பினும் குறித்த சிறுவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்வேளையில் அவனது உயிர் பிரிந்திருந்த்து. இவ்வாறு உயிரிழந்த சிறுவனின் மரண விசாரணை தொடல்பில் நீதிமன்றிற்கு செய்யப்பட்ட அறிக்கையின் பிரகாரம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன் பிரகாரம் மேற்கொண்ட உடற்கூற்றுப் பரிசோதனையின் பிரகாரமே குறித்த சிறுவனிற்கான இதய அறைகள் இரண்டு மட்டுமே இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.