வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் கடந்த இரண்டு மாதங்களில், பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.
தான் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், கடந்த இரண்டு மாதங்களில் வடக்கில் கடற்படையின் நிலைப்படுத்தல் முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதோடு, கடற்படையினரின் நடவடிக்கைகள் பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய பகுதிகளில் இருந்து படகுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை எல்லையில் குவித்துள்ளதாகவும், வடக்கில் பயன்படுத்தப்படும் படகுகளின் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்குப் பதிலாக, அதிவேகப் பீரங்கிப் படகுகளை நிறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த படகுகள் பெரிய, மற்றும் கனமான அடித்தளங்களைக் கொண்டவை எனவும், இத்தகைய நடவடிக்கைகளுக்காகவே அவைகள் வடிவமைக்கப்பட்டவை எனவும் அவர் கூறியுள்ளார்.
எமது நடவடிக்கைகள் முன்னரைப் போல இரகசியமானவையாக இல்லை எனவும், வெளிப்படைத்தன்மையும், பார்க்கக் கூடியதாகவும் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னைய முறை தவறானது எனவும், யுத்தத்தின்போது வேண்டுமானால் இரகசிய முறைகளைக் கடைப்பிடிக்கலாம் எனவும், போருக்குப் பின்னர் அவை அவசியமற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை தனது உபாயத்தை மாற்றியதை அடுத்து தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதை குறைத்துக் கொண்டு கேரள, ஆந்திர கடல்பகுதியை நோக்கிச் செல்வதாகவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா மேலும் தெரிவித்துள்ளார்