சர்ச்சைக்குரிய பிணை முறி தொடர்பான வாக்கு மூலம் வழங்கியவருக்கு, முன்னாள் அமைச்சரின் நெருங்கியவரினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிணை முறி தொடர்பான ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பணிப்பாளரான அனிகா விஜயசூரியவுக்கே இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பர்பெச்சுவல் ட்சரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து 116 லட்சம் ரூபாவிற்கு மாடி குடியிருப்பை வாடகைக்கு பெற்று அதனை முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு குடியிருக்க வழங்கியமை தொடர்பில் அனிகா விஜயசூரியவே சாட்சியம் அளித்திருந்தார்.
அந்த நிலையில் அவருக்கு, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் நெருங்கியவரினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் இன்று, பிணை முறி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்தது.
இந்தநிலையில் அவர் தற்போது வெளிநாட்டு சென்றிருப்பதாகவும், சட்டமா அபதிர் திணைக்களம், ஆணைக்குழுவுக்கு தெரிவித்தது.
இதனிடையே, பர்பெச்சுவல் ட்சரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸின் தனிப்பட்ட செயலாளர் ஸ்டீவ் சாமுவேல் இன்று பிணை முறி தொடர்பான ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்று விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் முன்னிலையாகியுள்ளார்.