அரசியல் கைதிகள் குறித்து ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை!

279 0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயம் தொடர்பில் பின்வரும் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை 2017, ஒக்ரோபர் 17 அன்று பி.ப.6.30 மணிக்கு பாராளுமன்றத்தின் ஒத்திவைப்பு வேளையில் சமர்ப்பிப்பதற்காக இத்தால் அறியத் தருகின்றேன்.

இந்தப் பிரேரணையானது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்குக் கிழக்கைச் சேர்ந்தவர்கள் பற்றியதாகும்.

விடயங்கள் பின்வருமாறு:

(i) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகள், தண்டனை விதிக்கப்பட்டவர்களாகவோ, குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகவோ அல்லது இன்னமும் குற்றச்சாட்டுக்கள் வழங்கப்படாதவர்களாகவோ இருந்தாலும் அவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டார்கள் என்பதுடன், அவர்களுக்கு எதிரான சகல நடவடிக்கைகளும் அச்சட்டத்தின் கீழேயே மேற்கொள்ளப்பட்டன.

(ii) இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொடூரமான, வெறுக்கத்தக்க ஒரு சட்டம் என்பதும் அது காலத்துக்குப் பொருத்தமற்ற தென்பதும் இலங்கை அரசினால் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்கப் போவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கம் உறுதி வழங்கியிருந்தது.

(iii) இந்த உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டை இலங்கை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும், இதன்மூலம் குறித்த சட்டம், சட்டப் புத்தகங்களில் தொடர்ந்திருக்க மாட்டாதென்ற இலங்கை அரசின் உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டிலிருந்து தவற முடியாது.

(iv) இந்த நபர்களில் அனேகமானவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரேயொரு சான்று அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே என்பதோடு, அது சாதாரணமான நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான சாட்சியமாக ஏற்கப்பட மாட்டாது. இதனால் வழக்குத் தொடுநர்களிடம் போதிய சாட்சியங்கள் இல்லாமை காரணமாக அனேக வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

(v) அனேகமாக இவர்கள் எல்லோருமே அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய காலத்தைப் போன்ற நீண்ட காலத்திற்குத் தடுப்புக்காவல் கைதிகளாகவே இருக்கின்றனர்.

(vi) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்களின் குடும்பங்கள் அவர்களின் உழைப்பாளிகளின் ஆதரவு இல்லாமல், நீண்டகாலமாக வேதனையில் வாடுகின்றன. மிகவும் காத்திரமான இம் முக்கிய விடயத்திற்கு இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை.

(vii) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தீய அம்சங்களுக்கும் புறம்பாக, மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) கிளர்ச்சிகளை மேற்கொண்ட வேளையில் கைது செய்யப்பட்டவர்கள் யாவரும் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இதேபோன்ற ஒரு கொள்கையை தற்போதுள்ள இந்தக் கைதிகள் விடயத்திலும் செயற்படுத்த முடியாமலிருப்பது ஏன் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது.

(viii) இந்த வழக்குகள் முழுமையாகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவையென்பதாகக் கருத முடியாது. அரசின் முதன்மைச் சட்ட ஆலோசகர் என்ற வகையில் சட்டமா அதிபருக்குரிய கௌரவத்தை வழங்கும் அதேவேளை, இவ்வழக்குகள் அரசியல் அடையாளங்களையும் கொண்டிருப்பதனால் இவை முழுமையாகச் சட்டம் சம்பந்தப்பட்டவையென்று கருதிவிட முடியாது.

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்பட்டிருந்தால், கைதிகளாக உள்ளவர்களில் அனேகமானவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டிருக்க மாட்டாதென்பதும் அவர்கள் பயனுள்ள பிரஜைகளாக இருந்திருப்பார்கள் என்று கூறுவதில் நியாயமிருப்பதைத் தெரிவிக்க முடியும். இத்தகைய சூழ்நிலையில், தாங்கள் இந்த விடயத்தை அரசியல் ரீதியாகவும் நோக்க வேண்டிய கடப்பாட்டை உருவாக்கியுள்ளது. இந்த விடயம் அரசியல் ரீதியாகக் கையாளப்படாமலிருப்பது இன இணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நன்மதிப்பையும் அமைதி நிலைமையையும் மீள ஏற்படுத்துவதிலும் வலுவான தடையாகவே அமையும்.

(ix) சில வழக்குகள் வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு இடமாற்றப்பட்டதன் மூலம் சில தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அவசியமாயின் வழக்குகளை இடமாற்றம் செய்யாமல், சாட்சிகளுக்கான பாதுகாப்புக்களை வழங்கியிருக்க முடியும்.

குற்றஞ்சாட்டப்பட்ட கைதிகள் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ்மொழி பேசுபவர்கள் என்பதுடன், மற்ற நிர்வாக நீதிமன்றப் பாவனையில் உள்ள சிங்கள மொழியில் பாண்டித்தியம் இல்லாதவர்களாக இருக்கின்ற அதேவேளை, தமிழ்மொழிப் பாவனையில் உள்ள வவுனியா நீதிமன்றத்தில் இருந்து சிங்கள மொழிப் பாவனையில் உள்ள அனுதாரபுர நீதிமன்றத்திற்கு அவர்களுடைய வழக்குகள் மாற்றப்படுகின்றபோது, அவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கான அரசியலமைப்பு ரீதியான அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

ஒரு குற்றவியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் உரிமை என்பது அடிப்படையானது. அவருக்கெதிராக முன்வைக்கப்படவுள்ள வழக்கையும் சாட்சியங்களையும் முழுமையாகக் கேட்பதற்கும் அறிந்து கொள்வதற்கும் அவருக்குப் பூரண உரிமை உள்ளது.

இவ்வாறாக வழக்கு இடம் மாற்றப்படுவதானது குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தனது விருப்பத்தின் அடிப்படையில் சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை மறுக்கப்படுகின்ற அதேவேளை, இது உள்ளடங்கலான ஏனைய அம்சங்களும் நீதியான ஒரு விசாரணை இடம்பெறுவதனை மறுதலிப்பதாக அமையும். முன்மொழியப்பட்டுள்ள இந்த வழக்கு இடமாற்றமானது குற்றஞ்சாட்டப்பட்ட நபரது அடிப்படை உரிமை சம்பந்தமாக எந்தவொரு அவதானிப்பையும் கருத்திற் கொள்ளவில்லை என்பதையே பிரதிபலிக்கின்றது.

குறித்த இடமாற்றத்திற்கு எதிராக கைதிகள் தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலைமையானது அவசரமான அடிப்படையில் கையாளப்பட வேண்டியதாகும்.

அத்துடன், மேற்குறிப்பிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இக் கைதிகள் எவ்வித தாமதமுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்பதை நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றேன்.

இரா.சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர் – திருகோணமலை
இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

Leave a comment