பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் மூழ்கிய சரக்கு கப்பலில் பயணித்த 10 இந்திய மாலுமிகளை கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
துபாய் நாட்டின் ஸ்டெல்லார் ஓசன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எமரால்டு ஸ்டார்’ என்ற சரக்கு கப்பல், கடந்த வெள்ளிக்கிழமை பிலிப்பைன்ஸ் நாட்டின் கடல் பகுதியில் மூழ்கியது. இதில், பயணம் செய்த 26 இந்திய மாலுமிகளில் 16 பேர் மீட்கப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த மாலுமிகள் உள்ளிட்ட 10 மாலுமிகளின் கதி என்னவென்று தெரியவில்லை.
பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் சீனாவில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் தேடும் பணி நடைபெற்று வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 5 பேர் பிலிப்பைன்சின் ஐரீன் நகரில் இருப்பதாகவும், அவர்கள் தூதரகம் மூலம் அங்கிருந்து மணிலாவுக்கு அழைத்து வந்து பின்னர் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் அடுத்தடுத்து தகவல்களை பதிவு செய்துள்ளார்.
‘தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஜப்பான் கடலோர காவல் படையின 2 ரோந்து கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் என்னிடம் தெரிவித்துள்ளது. இந்திய கடற்படையின் விமானம் மணிலாவுக்கு சென்று தேடும் பணியில் இணைந்துள்ளது’ என சுஷ்மா கூறியுள்ளார்.
மீட்கப்பட்ட இந்திய மாலுமிகளில் சிலர் சீனாவில் உள்ள ஜியாமென் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்.