முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி யாருடைய தலையீடும் இல்லாமல் நடந்து வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் கமிஷனில் நடைபெற்ற விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளோம். உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பதற்கு அனைத்து பிரமாண பத்திரங்களையும் கொடுத்துள்ளோம்.
இரட்டை இலை சின்னம் கிடைக்க கூடாது என்பதற்காக எதிர்அணியினர் பல்வேறு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். அதை எதிர்கொண்டு வருகிறோம். அதில் நாங்களே வெற்றி பெறுவோம்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க கட்சி சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி யாருடைய தலையீடும் இல்லாமல் நடந்து வருகிறது. கட்சியும், ஆட்சியும் சிறப்பாக நடக்கிறது. மக்கள் நலத் திட்டங்களும் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. மாவட்டம் தோறும் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவ குழுக்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது.
கிராமங்கள் தோறும் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது டெங்கு காய்ச்சல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.