39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

55025 0

சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் செயல்பாடுகளை மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறை சமீபத்தில் ஆய்வு செய்தது. 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை அவர்கள் பணியில் சேர்ந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு, 25 ஆண்டுகளுக்கு பிறகு என இருமுறை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் செயல்பாடுகளை மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறை சமீபத்தில் ஆய்வு செய்தது.

அதில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் உள்ள 29 பேரும் சந்தேக வளையத்தில் இருக்கின்றனர். இந்த 68 பேரில் பலர் மூத்த அதிகாரிகள் ஆவர். அவர்கள் மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில் பணியில் சிறப்பாக செயல்படாத ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 129 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 67 ஆயிரம் பேர் சிறப்பாக செயல்படாதது தெரியவந்து உள்ளது. அவர்களின் முந்தைய பணி காலம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இவர்களில் 25 ஆயிரம் பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.